இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் முன்னோக்கிச் செல்ல மத்திய அரசை அனுமதிக்க மாட்டோம் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறியுள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் இன்று மாலை அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு மீதான நெருக்கடிகள் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியுடன் விவாதிக்கின்றனர்.
இதற்காக சென்னை வந்த டி.ராஜா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னோக்கிச் செல்ல மத்திய அரசை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த விடயத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக மூத்த தலைவர்களிடம் விவாதிப்பது நல்லது என்பதால், முதல்வர் கருணாநிதியைச் சந்திக்க உள்ளோம். எங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தும் விவாதிக்கிறார்" என்றார்.