ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த கடுமையான மோதலில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இன்று காலை கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.
இதையடுத்து அத்தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்து வருவதாகவும், இச்சத்தம் அமர்நாத் புனித யாத்திரைப் பாதை வரை கேட்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருதரப்பிற்கும் இடையில் நடந்த கடும் மோதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
முன்னதாக இப்பகுதியில் நேற்று தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ வெடி மருந்தை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து, அதை பாதுகாப்பாக வெடிக்கச் செய்தனர்.
பராமரிப்பில்லாத பாதை தீவிரவாதிகளுக்குச் சாதகமாக அமைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.