இலங்கை இனப் பிரச்சனைக்கு ராணுவத் தீர்வை இந்தியா விரும்பவில்லை என்று கொழும்பில் இந்திய உயர்மட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
"அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சிறிலங்கா என்ற கட்டமைப்பிற்கு உட்பட்டு இனப் பிரச்சனைக்கு ஒரு அமைதியான தீர்வை சிறிலங்கா கண்டறியும் என்று இந்தியா நம்புகிறது" என்று இந்திய உயரதிகாரி ஒருவர் கூறியதாக பி.டி.ஐ. நிறுவனம் தெரிவிக்கிறது.
சிறிலங்கா சென்ற தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தலைமையிலான அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் ஆகியோர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் இன்று சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து ஒரு மணிநேரம் பேசினர்.
இச்சந்திப்பின் விவரங்கள் எதையும் இருதரப்பினரும் வெளியிடவில்லை. இருந்தாலும் சுருக்கமான பத்திரிகைக் குறிப்பு ஒன்று இந்திய பத்திரிகையாளர்களுக்கு படித்துக் காட்டப்பட்டது.
அதில், மற்ற விவகாரங்களுடன் சார்க் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதை முன்னிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்திய உயர்மட்டக் குழுவினர் இந்தியா திரும்புவதற்கு முன்பு சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர்.
முன்னதாக, நேற்று அவர்கள் கொழும்பு சென்றதில் இருந்து சிறிலங்கப் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச, அதிபரின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ச மற்றும் தமிழர் தலைவர்கள் சிலரைச் சந்தித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.