தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம், அமெரிக்காவுடனான ராணுவ உறவுகளுக்கு மட்டுமே அவசியமான மோசமான அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாற்றியுள்ளது.
"இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பிற்கு அணுசக்தி மிகவும் அவசியம் என்று காங்கிரஸ் தலைமையும், ஐ.மு.கூட்டணி அரசும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றன.
தவறான தகவலை மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்வதன் மூலம், நமது நாட்டின் மின் பற்றாக்குறைக்கு மட்டுமல்லாமல் எரிபொருள் விலையேற்றத்திற்கும் அணுசக்திதான் தீர்வு என்று பரப்பப்படுகிறது.
இது, அமெரிக்காவுடனான ராணுவ உறவுகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையே தவிர வேறு ஒன்றுமல்ல" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு விடுத்துள்ள அறிக்கையில் குற்றம்சாற்றப்பட்டுள்ளது.
இந்திய- அமெரிக்க ராணுவ உறவுகளை நேரடியாக வலுப்படுத்த முடியாது என்ற காரணத்தால், எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்கு மட்டுமல்லாமல் மின் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கும் அணுசக்திதான் ஒரே தீர்வு என்று வலியுறுத்தப்படுகிறது, அதன் மூலம் ஒரு மோசமான அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை மேற்கொள்வதற்கு முயற்சிக்கப்படுகிறது என்றும் அக்கட்சி கூறியுள்ளது.