மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசிற்கு பகுஜன் சமாஜ் கட்சி அளித்து வந்த ஆதரவு விலக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முதல்வருமான மாயாவதி சனிக்கிழமை அறிவித்தார்.
இதுகுறித்துத் தான் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து தனது கட்சி வெளியில் தள்ளப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளதாக லக்னோவில் இன்று செய்தியாளர்களிடம் மாயாவதி தெரிவித்தார்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் ஐ.மு.கூட்டணி அரசின் தோல்வியும், ஆதரவை விலக்குவது என்ற தனது முடிவிற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணங்களில் ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சிக்குக் களங்கம் விளைவிப்பதற்கு காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாகவும், மத்திய ஐ.மு.கூட்டணி அரசு உத்தரப் பிரதேசத்துடன் விரோதம் பாராட்டுவதாகவும் மாயாவதி குற்றம்சாற்றினார்.
எதிர்காலத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ளப் போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறிய மாயாவதி, தனது கண்களுக்கு இரண்டு கட்சிகளும் ஒரே மாதிரித்தான் தெரிவதாக கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடந்த இடைத் தேர்தல்களில் சமாஜ்வாதிக் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துச் செயல்பட்டன என்று குற்றம்சாற்றினார் மாயாவதி.
மக்களவைத் தேர்தல் எப்போது வரும் என்ற கேள்விக்குப் பதிலளிக்க மறுத்த மாயாவதி, தேர்தல் எப்போது வந்தாலும் தனது கட்சி தயாராகவே உள்ளது என்றார்.
தற்போதைய மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 17 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.