இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை இடதுசாரிகளின் ஆதரவின்றி நிறைவேற்றக் கூடாது என்று தேசியவாதக் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலர் டி.பி. திரிபாதி, "இடதுசாரிகளின் ஆதரவு இல்லாமல் அணுசக்தி உடன்பாட்டை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது" என்றார்.
அணுசக்தி உடன்பாடு குறித்து பிரகாஷ் காரத்துடன் தான் விவாதிக்கவில்லை என்று கூறிய திரிபாதி, தேசியவாதக் காங்கிரஸ் கட்சி அணுசக்தி உடன்பாட்டிற்கு எதிரானது அல்ல என்று அழுத்தமாகத் தெரிவித்தார்.
"அணுசக்தி உடன்பாடு குறித்து நாங்கள் தெளிவாக உள்ளோம். நாங்கள் அதற்கு எதிரானவர்கள் அல்ல. நமது நாட்டின் நலன்களுக்குத் தேவையான உடன்பாடுகளில் இதுவும் ஒன்று. ஆனால் இவ்வுடன்பாடு குறித்து இடதுசாரிகள் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர்" என்றார்.
கேரளத்தில் இடது முன்னணிக் கூட்டணியில் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியும் இணைவது பற்றி திரிபாதியும், பிரகாஷ் காரத்தும் விவாதித்ததாகத் தெரிகிறது.