புது டெல்லி: ஐ.மு.கூ. அரசு நிச்சயமாக ஐந்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும்; இதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி தெரிவித்தார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் சர்வதேச அணுசக்தி முகமை மற்றும் அணு எரிபொருள் வழங்கு நாடுகள் குழு ஆகியவற்றைக் கடந்து அமெரிக்க காங்கிரசிற்கு அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு செல்லும் என்று தான் நம்புவதாகவும் தாஸ்முன்ஷி கூறினார்.
மேலும், அணுசக்தி உடன்பாடு உள்பட பல்வேறு விடயங்களில் பிரதமருக்கும் சோனியாவிற்கும் இடையில் வேறுபட்ட கருத்துக்கள் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க நாட்டில் உள்ள ஒருபகுதி ஊடகங்கள் முயன்று வருகின்றன என்றும் அவர் குற்றம்சாற்றினார்.
"ஐ.மு.கூ. தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சியை வழிநடத்திச் செல்பவர் என்ற வகையில் சோனியா காந்தி அணுசக்தி உடன்பாட்டு விடயத்தில் உறுதியாக உள்ளார். இதில் பிரதமருக்கும் சோனியாவிற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை" என்று சிஎன்என்- ஐபிஎன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தாஸ்முன்ஷி கூறினார்.
பிரதமர் பற்றிக் கூறுகையில், "கூட்டணி அரசியலில் மற்ற கட்சிகளின் ஆதரவை நம்பியிருக்கும் அரசு உள்ள இடங்களில், இதுபோன்ற குழப்பங்கள் வரக்கூடும். ஆனால், இதற்காக எங்கள் பிரதமர் சோர்ந்துபோக நாங்கள் விட மாட்டோம்" என்றார் தாஸ்முன்ஷி.
இடதுசாரிகளின் ஆதரவு விலக்கல் மிரட்டல் பற்றிக் கேட்டதற்கு, ஐ.மு.கூ. அரசு நிச்சயமாக ஐந்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும்; இதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்றார் அவர்.