இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாடு தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடிகள் குறித்து மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து விவாதித்தார்.
சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின் போது, கடந்த சில நாட்களாகத் தானும் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் இடதுசாரிகள் மற்றும் ஐ.மு.கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய பேச்சுக்கள் குறித்து பிரதமரிடம் அமைச்சர் பிரணாப் முகர்ஜி விவரித்தார்.
இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாடு மீதான இடதுசாரிகள்- ஐ.மு.கூ. உயர்மட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இச்சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசவில்லை.
முன்னதாக நேற்றிரவு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோருடன் பிரணாப் முகர்ஜி சுமார் 2 மணி நேரம் விவாதித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. நிலைமை இன்னும் அப்படியேதான் உள்ளது என்றார்.
அணுசக்தி உடன்பாட்டு விடயத்தில் இடதுசாரிகளின் கருத்துகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.