மத்திய அரசின் மூவர் அடங்கிய உயர்மட்டக் குழு சிறிலங்கத் தலைநகர் கொழும்புக்கு இன்று காலை அறிவிக்கப்படாத பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மத்திய அயலுறவு அமைச்சகச் செயலர் சிவசங்கர் மேனன், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பாதுகாப்பு அமைச்சகச் செயலர் ஸ்ரீ விஜய சிங் ஆகியோர் அடங்கிய இக்குழுவினர் சிறிலங்க அரசுடன் முக்கியப் பேச்சு நடத்திவிட்டு நாளை மீண்டும் இந்தியா திரும்புகின்றனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 11.45 மணிக்கு சிறப்பு விமானத்தில் வந்திறங்கிய இக்குழுவினர், கொழும்பில் சிறிலங்க அரசின் முக்கியப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுகின்றனர் என்று புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
சார்க் உச்சி மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க உள்ளதால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விவாதிக்கவே இப்பயணம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சிறிலங்க அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.