மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்யும் என்று தான் நம்புவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
புது டெல்லியில் இன்று இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு பற்றிய கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய காரத், இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டு விடயத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் பேசுகையில், "மத்திய அரசு தனது முழுப் பதவிக் காலத்தையும் நிறைவு செய்யும் என்று நான் நம்புகிறேன். அதற்கான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்ய நாங்கள் முயற்சித்து வருகிறோம்" என்றார்.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டையும் அதற்கு அவசியமான சர்வதேச அணுசக்தி முகமையுடனான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தையும் இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், பிரகாஷ் காரத் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.