இந்துக்களின் புனித தலமான திருப்பதி மலையில் 20 முதல் 25 செக்ஸ் மையம் செயல்பட்டு வருகிறது என்று ஆந்திர மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய இயக்குனர் ஆர்.வி.சந்திரவதன் கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ஆந்திராவில் உள்ள 3,500 செக்ஸ் தொழிலாளர்களில் 400 பேர் திருப்பதி மலைப் பகுதியில் உள்ளனர். அவர்கள் உலக நாடுகளில் இருந்து திருப்பதி கோயிலுக்கு வருபவர்களை சந்தோஷப்படுத்துகின்றனர்.
தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்து இங்கு வேலை பார்க்கும் கட்டட தொழிலாளர்கள் மற்றும் பக்தர்கள் அதிகமாக செக்ஸில் ஈடுபடுகின்றனர்.
7,604 பேரை சோதனை செய்ததில் 268 பேருக்கு எய்ட்ஸ் இருப்பது தெரியவந்துள்ளது என்று சந்திரவாணன் கூறினார்.
இது தொடர்பான செய்தி வந்தவுடன் திருமலா திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்துள்ளது. உடனடியாக செய்தியாளர்களை சந்தித்த தேவஸ்தான செய்தி அதிகாரி கே.ரமாச்சாரி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய இயக்குனர் சந்திரவதன் தனிப்பட்ட முறையில் இதனை தெரிவித்துள்ளார் என்றார்.
இந்துக்களின் புனித தலமான திருப்பதியில் செக்ஸ் தொழில் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது குறித்து திருப்பதி திருமலா தேவஸ்தான தலைவர் பி.கருணாகரரெட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
திருப்பதியில் செக்ஸ் தொழில் அதிகரித்துள்ளதாக கூறிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய இயக்குனர் சந்திரவதனுக்கு, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.