இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நிறைவேற்ற மத்திய அரசு முயன்றால், ஆதரவை திரும்பப் பெறுவது பற்றிப் பரிசீலிப்போம் என்று இடதுசாரிகள் எச்சரித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி, "ஐ.மு.கூ.- இடதுசாரிகள் உயர்மட்டக் குழுவின் அடுத்த கூட்டம் நடக்கவுள்ள ஜூன் 25 ஆம் தேதி வரை மத்திய அரசிற்கு காலம் உள்ளது. அதுவரை யோசிக்கட்டும். ஒருவேளை அவர்கள் உடன்பாட்டை நிறைவேற்ற முயன்றால் ஆதரவைத் திரும்பப் பெறுவது பற்றிப் பரிசீலிப்போம்.
அந்த சந்தர்ப்பத்தில் சூழ்நிலையைச் சந்திப்பதைத் தவிர இடதுசாரிகளுக்கு வேறு வழியில்லை. அதன்பிறகு பேச்சு பலனளிக்காது. முதலில் அரசு என்ன முடிவு செய்துள்ளது என்பதை ஜூன் 25ஆம் தேதி தெரிவிக்கட்டும். அதன்பிறகு நாங்கள் முடிவு செய்வோம்" என்றார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா, அணுசக்தி உடன்பாட்டிற்கு நாடாளுமன்ற ஆதரவு கிடைக்காத நிலையில் அதை நிறைவேற்ற மத்திய அரசு நினைக்கிறது. ஒருவேளை அதை நிறைவேற்ற முயற்சித்தால் மத்திய அரசிற்கு இடதுசாரிகளின் ஆதரவு கிடைக்காது என்றார்.
காங்கிரஸ், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிற்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக அரசைத் தியாகம் செய்யப் போகிறதா அல்லது விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுடப் போகிறதா என்பதைத் தான் தெரிந்துகொள்ள விரும்புவதாக ராஜா கூறினார்.
முன்னதாக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியிடம் பேசிய டி.ராஜா, இடதுசாரிகளின் நிலைப்பாட்டை விளக்கினார்.
மக்களவையில் 59 உறுப்பினர்களைக் கொண்டுள்ள இடதுசாரிகள், தாங்கள் வெளியில் இருந்து அளித்துவரும் ஆதரவை விளக்கிக் கொண்டால், நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.