மத்திய அரசிற்கு இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு, இடதுசாரிகளின் ஆதரவு இரண்டுமே வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
புது டெல்லியில் இன்று தன்னைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரியிடம் லாலு பிரசாத் யாதவ், "அரசிற்கு இரண்டுமே தேவை (அணுசக்தி உடன்பாடு, இடதுசாரிகள்)" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாலு, "அரசுகள் வரும் போகும். அணுசக்தி அவசியத் தேவை. அடுத்த தலைமுறைக்காக அணுசக்தி வளங்களை உருவாக்க வேண்டியது கட்டாயம்" என்றார்.
இடதுசாரிகளின் ஆதரவும் தங்களுக்குத் தேவை என்று கூறிய லாலு, அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திடுவதன் மூலம் நாம் ஒன்றும் அமெரிக்காவின் அடிமைகளாகிவிட மாட்டோம் என்றார்.
தங்கள் கருத்தைக் கூற இடதுசாரிகளுக்கு உரிமை உள்ளது என்பதை ஏற்றுக்கொண்ட அவர், "அணுசக்தி உடன்பாடு நிறைவேறும் என்று நான் நம்புகிறேன். நிறைவேறாவிடில் அது நமது நாட்டின் துரதிர்ஷ்டம்" என்றார்.
இதற்கிடையே, அணு உடன்பாட்டை நடைமுறைப்படுத்தினால், தங்களது ஆதரவை விலக்கிக் கொள்வது குறித்து இடதுசாரிகள் பரிசீலிப்பர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி மீண்டும் எச்சரித்துள்ளார்.