இந்திய எல்லையில் சீன ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறும் விடயம், உரிய முறையில் சீன அரசிடம் எடுத்துச் செல்லப்படும் என்று மத்தியப் பாதுகாப்பு இணையமைச்சர் எம்.எம்.பள்ளம் ராஜூ கூறினார்.
இதுகுறித்து புது டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அத்துமீறல் விவகாரம் இந்திய ராணுவம்- சீன ராணுவம் இடையிலான அடுத்த சந்திப்பு கூட்டத்தின் போது எழுப்பப்படுவதுடன், உரிய முறையில் விவாதிக்கப்படும். இரண்டு பொறுப்புள்ள அண்டை நாடுகள் என்ற அடிப்படையில் இவ்விவகாரம் தீர்க்கப்படும்" என்றார்.
கடந்த ஆறு மாதங்களில் 65 முறை சீன ராணுவத்தினர் இந்திய எல்லையான சிக்கிம் மாநிலத்தின் விரல் பகுதியில் அத்துமீறி உள்ளனர். கடந்த 16 ஆம் தேதி சீன ராணுவத்தினர் இலகு ரக வாகனங்களில் இந்திய எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்துவிட்டுத் திரும்பியுள்ளனர்.
இதுகுறித்துக் கேட்டதற்கு, "இவை துரதிர்ஷ்டவசமானவை. சிக்கிம் எல்லை விவகாரம் மீண்டும் எழுப்பப்படும். இந்தியாவைப் பொறுத்தவரை சிக்கிம் விவகாரம் தீர்க்கப்பட்ட ஒன்று" என்றார் பள்ளம் ராஜூ.