கூர்க்கா லேண்ட் என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கேட்டு கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் நடத்தி வரும் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டத்தினால், இரண்டாவது நாளாக இன்றும் சிக்கிம் மாநிலம் தேசத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
சிக்கிம் மாநிலத்தை தேசத்தின் பிற பகுதிகளுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 31ஏவில் இன்றும் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.
எந்த வாகனமும் மாநிலத்தில் இருந்து வெளியேறவும் இல்லை, மாநிலத்திற்குள் நுழையவும் இல்லை என்று சிக்கிமின் இரண்டு நுழைவாயில்களான ராங்போ சோதனைச் சாவடி மற்றும் மெல்லி சோதனைச் சாவடி காவலர்கள் தெரிவித்தனர்.
கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பின் ஆதரவாளர்கள் இந்த இரண்டு சோதனைச் சாவடிகளையும் முற்றுகையிட்டு போக்குவரத்தைத் தடுத்துள்ளனர். சில ராணுவ வாகனங்கள் மட்டும் சென்று வருகின்றன.
இதற்கிடையில், மாநிலம் முழுவதும் பெட்ரோலியப் பொருட்கள் ரேஷன் முறையில் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. எல்லா வாகனங்களுக்கும் ஒரு நாளைக்கு 10 லிட்டர் டீசலும், 5 லிட்டர் பெட்ரோலும் மட்டுமே வழங்க வேண்டும் என்று உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இருந்தாலும் இக்கட்டுப்பாடு மருத்துவமனைப் பணிகள் மற்றும் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ள வாகனங்களுக்குப் பொருந்தாது.
முன்னதாக ரேஷன் முறையில் சமையல் எரிவாயு வழங்கும் பணிகள் ஏற்கெனவே சிக்கிமில் துவங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.