Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வியாதியை மறைத்திருந்தாலும் நஷ்டஈடு வழங்க வேண்டும்!

வியாதியை மறைத்திருந்தாலும் நஷ்டஈடு வழங்க வேண்டும்!
, திங்கள், 16 ஜூன் 2008 (16:11 IST)
மருத்துவ காப்பீடு செய்து கொண்டவர், தனக்கிருந்த வியாதியை மறைத்திருந்தாலும் மருத்துவ காப்பீடுக்கான நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று டெல்லி நுகர்வோர் குறைதீர்ப்பு மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு பற்றிய விபரம் வருமாறு:

டெல்லியில் விஷ்ணு கார்டன் என்ற பகுதியில் வசிப்பவர் மொகிந்தர் சிங். இவர் ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்தில் 2000 ஆம் ஆண்டு ஜூலை 10 ந் தேதி மருத்துவ காப்பீடு செய்து கொண்டார். இவருக்கு மார்பு வலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். மொகிந்தர் சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு குருதிக் குழாய் சீரமைப்பு (angioplasty) அறுவை சிகிச்சை செய்தனர். இதற்கு ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் செலவானது.

ஓரிய‌ண்டல் காப்பீடு நிறுவனத்திடம், மொகிந்தர் சிங், தனது குருதி குழாய் சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கான செலவை கொடுக்கும்படி விண்ணப்பித்தார். இந்த தொகையை கொடுக்க ஓரியண்டல் காப்பீடு நிறுவனம் மறுத்துவிட்டது.

டெல்லி மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு மன்றத்தில் மொகிந்தர் சிங், தனக்கு மருத்துசிகிச்சை‌க்கான செலவை காப்பீடு நிறுவனம் வழங்க உத்தரவிடும் படி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி மாவட்ட குறைதீர்ப்பு மன்றம், மொகிந்தர் சிங்கிற்கு ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் வழங்கும் படி, பொதுத்துறை காப்பீடு நிறுனமான ஓரிய‌ண்டல் காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஓரிய‌ண்டல் காப்பீடு நிறுவனம், டெல்லி மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு மன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

அதில் மொகிந்தர் சிங் மருத்துவ காப்பீடு செய்து கொள்ளும் போது, அவருக்கு இருதய குருதிக் குழாயில் கோளாறுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டதை மறைத்து விட்டார். எனவே மருத்துவ காப்பீடு படி, அவரின் மருத்துவ செலவை தர இயலாது என்று கூறியது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி மாநில குறைதீர்ப்பு மன்ற தலைவர் நீதிபதி ஜே.டி.கபூர் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

மருத்துவ காப்பீடு வழங்குவதற்கு முன்பே, அவர் காப்பீடு பெற தகுதியானவரா, இல்லையா என்பதை காப்பீடு நிறுவனம் உறுதி செய்து கொண்டு இருக்க வேண்டும். காப்பீடு செய்த பிறகு, அவர் மறைத்து விட்டார் என்பன போன்ற காரணங்களை கூறி, அதன் பொறுப்புகளை (மருத்துவ செலவு தருவதை) தட்டிக் கழிக்க கூடாது.

காப்பீடு செய்து கொள்வதற்கு ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு முன்பு, அவருக்கு உள்ள வியாதிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருந்தாலோ, அல்லது மருத்துவமனையில் இருந்தால் மட்டுமே, அவர் விபரத்தை மறைத்துவிட்டதாக கருத முடியும். அதிக அளவு அழுத்தம் உள்ள இன்றைய வாழ்க்கை நிலைமையில் தினசரி ஏற்படும் சிறு கோளாறுகளை மறைத்துவிட்டதாக கூற முடியாது.

ஒருவர் மருத்துவ மொழியின் படி, குறிப்பிட்ட நோய் தனக்கு இருப்பதை, அவர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று இருந்தாலோ, அல்லது அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருந்தால் மட்டுமே தனக்கு உள்ள நோய் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

அது போலவே ஒருவருக்கு 10 அல்லது 20 வருடங்களுக்கு முன்பு இருதய பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தால் அல்லது அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருந்தாலும், தற்போது அவர் ஆரோக்கியமாக இருந்தால், அவர் முன்பு செய்து கொண்ட சிகிச்சை பற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை.

இதையே சாக்காக எடுத்துக் கொண்டு காப்பீடு நிறுவனம், அதன் பொறுப்புகளை தட்டி கழிக்க முடியாது. அவர்கள் காப்பீடு வழங்குவதற்கு முன்னரே, குறிப்பிட்ட நபர் காப்பீடு செய்து கொள்வதற்கு தகுதியானவரா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த வழக்கில் இருந்து காப்பீடு நிறுவனங்கள் தங்கள் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவது இல்லை என்பது தெரிகின்றது. இவ்வாறு இருந்தால் மக்கள் தொகையில் பாதி பேர், இந்த மாதிரி பாதிக்கப்பட்டு இருக்கும் போது, காப்பீடு நிறுவனங்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டால், காப்பீடு நிறுவனங்களில் குறைந்த அளவே காப்பீடு வர்த்தகம் நடக்கும் அல்லது முழுமையாக நின்று விடும் என்று நீதிபதி ஜே.டி.கபூர் தீர்ப்பில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil