உலகமயமாக்கல், வேகமான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்க இடையில் பஞ்சாயத்துப் பிரதிநிதிகளின் குரல்களுக்கும் மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என்று அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று நடந்த பஞ்சாயத்து அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற சோனியா காந்தி, "ஜனநாயக அமைப்பு ஆரோக்கியமாகச் செயல்பட பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டியது அவசியம். அவ்வாறு அதிகாரம் அளித்தால் மட்டுமே நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஊரகப் பகுதிகளுக்கும் சமமாகப் போய்ச்சேரும்" என்றார்.
"பஞ்சாயத்து அமைப்புகளின் அடிப்படைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு அவற்றுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் செயல்பட வேண்டியது பஞ்சாயத்துத் தலைவர்கள் வளர்ச்சித் திட்டங்களை வகுக்க வேண்டும்.
பஞ்சாயத்து ராஜ் அமைப்பை வலுவாக்க வேண்டும் என்ற மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கனவு தற்போது நனவாகி வருகிறது" என்றார் சோனியா.
இந்தக் கூட்டத்தில் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணிசங்கர் அய்யர், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர்கள், மாநிலத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.