நமது நாட்டின் பணவீக்கம் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாதவாறு 8.75 விழுக்காடாக உயர்ந்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இடதுசாரிகள், மத்திய அரசு ஊக வணிகர்களிடம் சரணடைந்து விட்டதாகக் குற்றம்சாற்றினர்.
வரும் நாட்களில் பணவீக்க விகிதம் இரண்டிலக்க எண்களைத் தொடும் என்று பல தரப்பினரும் அச்சம் தெரிவித்துள்ள நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நிலோட்பால் பாசு, "நமது நாட்டின் பொருளாதாரம் மிகமிக சிக்கலான நிலையில் உள்ளது. இதிலிருந்து மீள கொள்கை மாற்றங்கள் மட்டுமே உதவும்" என்றார்.
"ஊக வணிகர்கள் மற்றும் சந்தைத் தரகர்களின் தாளங்களுக்கு ஏற்ப மத்திய அரசு ஆடிக்கொண்டு இருக்கிறது. விலைவாசி உயர்வினால் பொது வினியோகத் திட்டமும், உணவு சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளும் பலவீனப்படும்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் கருதவில்லை. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் அரைகுறையாகவும் அரை மனதுடனும்தான் எடுக்கப்பட்டுள்ன.
உலகளவிலான ஊக வணிகத்தினால்தான் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன என்பதைத் தெளிவுபடுத்துவதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது. ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது" என்றார் பாசு.