இலங்கையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இனப்பிரச்சனை காரணமாக அப்பாவி மக்கள் பலியாகி வருவது மிகுந்த கவலை அளிக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
புது டெல்லியில் அவரது இல்லத்தில், பயிற்சியை முடித்துக்கொண்ட இந்திய அயல்நாட்டுச் சேவை அதிகாரிகள் மத்தியில் புதனன்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை உள்பட அயல்நாடுகளில் அமைதி நிலவ வேண்டியது இந்தியாவின் நலன்களுக்கு அத்தியாவசியம் என்று கூறியுள்ளார்.
மேலும், "இலங்கை இனப்பிரச்சனையின் தாக்கம் தீவிரமடைவதன் மூலம் இந்தியாவிற்கும் சிக்கல்கள் உருவாகின்றன. தமிழர்கள் அகதிகளாக பெருமளவில் வருவதால் இலங்கைக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் நெருக்கடி ஏற்படுகிறது.
இலங்கை இனப்பிரச்சனை உள்நாட்டுப் பிரச்சனை என்றாலும், மறுபுறம் அது இந்திய அயலுறவுக் கொள்கையுடன் தொடர்புடையதாக அமைந்து விடுகிறது.
அயல்நாடுகளுடன் சுமுக உறவைப் பேணவே இந்தியா விரும்புகிறது. இதனடிப்படையில் பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளுடன் உறவைம் மேம்படுத்த முயற்சித்த வருகிறது. எனினும் குறிப்பிட்ட அயல்நாடுகளும் தங்களைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.