இந்தியாவின் ஊடகக் கொள்கையில் மாற்றம் இல்லை என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
மேலும், அயல்நாட்டுப் பத்திரிகைகள் தங்களின் இந்தியப் பதிப்புகளைத் துவங்குவதற்கு அனுமதியளிக்கும் பரிந்துரை எதுவும் தங்களிடம் இல்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
முன்னதாக,அயல்நாட்டுப் பத்திரிகைகள் தங்களின் இந்தியப் பதிப்புகளைத் துவங்குவதற்கான பரிந்துரையை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தயாரித்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது.
இச்செய்தி முற்றிலும் தவறானது என்று கூறியுள்ள அமைச்சகம், இந்தியாவின் ஊடகக் கொள்கைகள் அரசின் இணைய தளத்தில் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் மாற்றமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
தற்சமயம் அயல்நாட்டுப் பத்திரிகைகளின் அறிவியல், தொழில்நுட்பம், சிறப்பு வெளியீடுகளுக்கு மட்டுமே இந்தியப் பதிப்பு வெளியிட அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.