சர்வதேச அணுசக்தி முகமையுடனான (ஐ.ஏ.இ.ஏ.) தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தைத் தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை மட்டுமே தாங்கள் எதிர்ப்பதாகவும் இடதுசாரிகள் கூறியுள்ளனர்.
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு முக்கியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கூறியுள்ளதை ஏற்றுக்கொள்ளாத இடதுசாரிகள், இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டில் தற்போதுள்ள குறைகளை நீக்காதவரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தனர்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி, "எங்களுக்கு சர்வதேச அணுசக்தி முகமையின் மீது அதிருப்தி இல்லை. அமெரிக்காவின் ஹைட் சட்டத்துடன் முழுமையாகப் பிணைந்துள்ள 123 உடன்பாட்டைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்" என்றார்.
மத்திய அரசு 123 உடன்பாட்டைத் தவிர்த்து தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தை மட்டும் நிறைவேற்ற அனுமதிப்பீர்களா என்று கேட்டதற்கு, "வருகிற 18 ஆம் தேதி நடக்கவுள்ள ஐ.மு.கூ.- இடதுசாரி கூட்டத்தில் மத்திய அரசு அப்படியொரு முடிவைச் சொல்லட்டும், அதன்பிறகு எங்கள் முடிவைச் சொல்கிறோம்" என்றார் யச்சூரி.