சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பகல்பூர் மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கான ரூ.29.81 கோடி மதிப்பிலான நிவாரணத் திட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, கடந்த 1989 ஆம் ஆண்டு நடந்த பகல்பூர் மதக் கலவரங்களில் கொல்லப்பட்ட 844 பேரின் உறவினர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.3.5 லட்சமும் காயமடைந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1.25 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும்.
இந்த நிவாரணத் தொகை, 1984 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணத் தொகைக்கு ஈடானது என்று மத்திய அரசின் பேச்சாளர் தெரிவித்தார்.
குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த மதக் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் திட்டத்தை அண்மையில் மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எழுதியிருந்த கடிதத்தில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிவாரணத்திற்குச் சமமான நிவாரணத்தை பகல்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.