அணு தொழில்நுட்பங்களைப் பெறுவதில் இருந்து இந்தியா தனிமைப்படுவதைத் தடுக்க இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு நடைமுறைக்கு வருவது அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இந்த உடன்பாட்டை நிறைவேற்றுவதில் சில நெருக்கடிகள் இருந்தாலும், வரும் மாதங்களில் அது சரியாகி உடன்பாடு நிறைவேறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாடு நிறைவேறினால் அமெரிக்காவிடம் இருந்து மட்டுமல்லாமல் ரஷ்யா, ஃபிரான்ஸ் உள்ளிட்ட அணுசக்தியில் தன்னிறைவு பெற்ற பிற நாடுகளிடம் இருந்தும் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த உடன்பாடு இல்லாமல் அணுசக்தி வர்த்தகத்தில் தன்னிறைவு பெறுவது சாத்தியமில்லை என்றார்.
புது டெல்லியில் இன்று தனது வீட்டில் அயல்நாட்டுப் பிரதிநிகளைச் சந்தித்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் மேலும் கூறுகையில், "அமெரிக்காவுடன் நாங்கள் செய்துகொண்டுள்ள அணுசக்தி உடன்பாடு தற்போது சில நெருக்கடிகளில் சிக்கியிருந்தாலும், அது எங்கள் தேச நலனையும், அணுசக்தி பயன்பாட்டுத் திறனையும், நாட்டின் பாதுகாப்பையும் காப்பாற்றும்" என்றார்.
"எங்கள் உள்நாட்டுக் கொள்கைகள், அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டு விடயத்தில் நாங்கள் மேற்கொண்டு முன்னேறாதவாறு தடுக்கின்றன" என்று குறிப்பிட்ட பிரதமர், வரும் மாதங்களில் நெருக்கடிகள் தீர்ந்து முன்னேற்றம் ஏற்படும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.