இந்திய எல்லைப் பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடுகிறது என்று புகார் எழுந்துள்ள நிலையில், தனது அண்டை நாடுகளுடன் மோத இந்தியா விரும்பவில்லை என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறினார்.
புது டெல்லியில் இன்று நடந்த பாதுகாப்புப் படை நிகழ்ச்சி ஒன்றைத் துவக்கிவைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இதுபோன்ற நடவடிக்கைகளை (இந்திய- சீன எல்லைச் சிக்கல்) நாங்கள் புறக்கணிக்கவில்லை. முடிந்தவரை மோதலைத் தவிர்க்க நாங்கள் முயற்சிப்போம்" என்றார்.
சீனாவுடன் உள்ள நீண்டகாலப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நாங்கள் முயற்சித்து வருகிறோம். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கேள்வி ஒன்றிற்கு அமைச்சர் அந்தோணி பதிலளித்தார்.
கடந்த ஒரு ஆண்டில் 150 முறை இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய எல்லைகளில் சீனா ஊடுருவல் புகார் ஒருபுறம் இருக்க, அண்மையில் சிக்கிம் மாநிலத்தின் ஒரு பகுதி தன்னுடையது என்று சீனா தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.