தொலைபேசி நிறுவனங்களிடையில் அதிகரித்துவரும் போட்டியைச் சமாளிக்கும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது எஸ்.டி.டி. அழைப்பு கட்டணங்களை 50 விழுக்காடு குறைத்துள்ளது.
இந்தக் கட்டணக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும், இனி நாட்டிலேயே மிகக்குறைந்த கட்டணமாக இது இருக்கும் என்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் குல்தீப் கோயல் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இனிமேல் எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.2.40 க்குப் பதிலாக ரூ.1.20 மட்டுமே வசூலிக்கப்படும்.
முன்னதாக, மற்றொரு அரசு நிறுவனமான மகாநகர் டெலிஃபோன் நிகாம் லிமிட்டெட் (எம்.டி.என்.எல்.) தனது எஸ்.டி.டி. கட்டணத்தை நிமிடத்திற்கு ரூ.2-இல் இருந்து ரூ.1.20 ஆகக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.
அரசுசார் நிறுவனங்களின் இந்தக் கட்டணக் குறைப்பு அறிவிப்பை அடுத்துத் தனியார் நிறுவனங்களும் கட்டணக் குறைப்பு அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.