Publish Date: Mon, 09 Jun 2008 (14:02 IST)
Updated Date: Mon, 09 Jun 2008 (14:02 IST)
பயங்கரவாதிகள் அல்லது தீவிரவாதிகளின் கைகளில் அணு ஆயுதங்கள் சிக்குவதற்கான ஆபத்து அதிகரித்து வருகிறது என்று எச்சரித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், ஆபத்தானவர்களின் கைகளில் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பமும், அணு பொருட்களும் இல்லை என்பதை எல்லா நாடுகளும் உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காலக்கெடு அடிப்படையில் அணு ஆயுத ஒழிப்பு, அணு ஆயுதப் பரவல் தடை ஆகியவற்றை உறுதி செய்ய சர்வதேச அளவில் உண்மையான கூட்டு முயற்சிகள் தேவை என்ற பிரதமர், இந்த விடயத்தில் தனது பங்களிப்பைச் செலுத்த இந்தியா தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
டெல்லியில் 'அணு ஆயுதங்கள் இல்லாத உலகம்" என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கைத் துவங்கி வைத்த பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
யாருடனும் ஆயுதப் போட்டியில் ஈடுபட இந்தியாவிற்கு விருப்பமில்லை என்று கோடிட்டுக் காட்டிய பிரதமர் மன்மோகன் சிங், எல்லா நாடுகளின் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்கான சர்வதேச அளவில் அணு ஆயுதங்களை ஒழிப்பது என்ற குறிக்கோளில் இந்தியா உறுதியாக உள்ளது என்றார்.
"உலகத்தின் பாதுகாப்பிற்கு தற்போது புதிய சவால்களும் அச்சுறுத்தல்களும் உருவெடுத்துள்ளன. தீவிரவாதத் தத்துவங்களால் வழி நடத்தப்படுபவர்கள் அல்லது பயங்கரவாதிகளின் கைகள் அணு ஆயுதங்களைக் கைப்பற்றும் சிக்கல் அதிகரித்து வருகிறது.
அரசுகளுக்கு எதிரானவர்கள் அணு பொருட்களையும், அணு ஆயுதத் தொழில்நுட்பங்களையும் கைப்பற்றி, வான்வெளி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் புது வகையான ஆயுதங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன" என்று பிரதமர் எச்சரித்தார்.