Publish Date: Fri, 06 Jun 2008 (19:55 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (22:44 IST)
கர்நாடகச் சட்டப் பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு வெற்றிபெற்றது.
கர்நாடகச் சட்டப் பேரவையில் இன்று எடியூரப்பா, "இந்த அவை பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது" என்ற ஒற்றை வரித் தீர்மானத்தை வாசித்தார். இத்தீர்மானத்தை விவாதமின்றி ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதை எதிர்த்த காங்கிரஸ் தலைவர் எம்.மல்லிகார்ஜூன கார்கே, அரசியல் நெருக்கடிகளால் இரண்டு கூட்டணி அரசுகள் கவிழ்வதை இம்மாநில அரசு கண்டுள்ளதால், சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள பா.ஜ.க. அரசின் மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
விவாதத்திற்குத் தயார் என்று அமைச்சர் எஸ்.சுரேஷ் குமார் கூறியதையடுத்து, அவைத் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் விவாதத்திற்கு அனுமதித்தார்.
இதையடுத்து நடந்த இரண்டு மணி நேர விவாதத்தில், பதவியேற்று ஒருவாரம் ஆகியும் தன்னுடைய அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்காமல் மிரட்டல் அரசியல் நடத்தி வருகிறார் எடியூரப்பா என்று கார்கே குற்றம்சாற்றினார்.
இதைத் தொடர்ந்த நடந்த வாக்கெடுப்பில் பா.ஜ.க. வெற்றிபெற்றது. இதைக் கண்டித்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.
கர்நாடகச் சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 226 இடங்களுக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 110 இடங்களில் வெற்றிபெற்றது. ஆட்சியமைக்க 113 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தேர்தலில் வெற்றிபெற்ற 6 சுயேட்சைகள் பா.ஜ.க.விற்கு ஆதரவளித்தனர். இதையடுத்து எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றது.
இருந்தாலும் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை பா.ஜ.க. எதிர்கொள்ள வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாகூர் உத்தரவிட்டதை அடுத்து, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.