தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையைச் சிறிதளவு உயர்த்தி இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் அளித்துள்ள விளக்கத்திற்கு இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முகமது சலீம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் எ.பி.பரதன், ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தேசியச் செயலர் தேவராஜன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கச்சா எண்ணெய் விலை உயர்வினால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதிச்சுமையைக் குறைப்பதற்காக, கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய அரசிற்கு இடதுசாரிகள் தெரிவித்து வரும் ஆலோசனைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது. இதற்காக வரும் சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்களில் கடுமையான அரசியல் விலையை ஐ.மு.கூ. கொடுக்க வேண்டியிருக்கும்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மிகக் குறைவானது அல்ல. இதனால் நமது நாட்டில் 4 விழுக்காடு மட்டும் உள்ள பணக்காரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், நாள்தோறும் ரூ.20 மட்டும் வருமானம் உள்ள 80 விழுக்காடு ஏழைகள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
டீசல் விலை உயர்வினால் பல வகைகளில் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர பிரதமர் ஏன் மறுக்கிறார். ஏற்கெனவே பணவீக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினை எப்படிச் சமாளிப்பார்கள். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தி இருப்பதை மிக குறைவான விலை உயர்வு என்று எப்படி பிரதமரால் கூற முடிகிறது.
பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகள் மூலமாக மிக அதிக வருவாய் அரசிற்குக் கிடைத்து வரும் நிலையில், மானியம் கொடுப்பதாகக் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அரசின் வாதத்திற்கு அடிப்படை ஆதாரமே இல்லை. பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் மற்றும் சுங்க வரிகள் குறித்து புதிய கொள்கைகள் உருவாக்க வேண்டும்.
இந்த விலை உயர்வு காரணமாக அபரிமிதமான லாபத்தைப் பெறவுள்ள ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிக வரி விதிக்க அரசு மறுப்பது ஏன்?
எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ஏற்கிறோம். அதேநேரத்தில் கார்கள் மற்றும் அதிநவீன சொகுசுக் கார்களின் விற்பனையைக் குறிப்பிட்ட காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு இடதுசாரித் தலைவர்கள் வலியுறுத்தினர்.