தேவையற்ற செலவுகளைத் தவிர்க்குமாறும், அரசுப் பணத்தைச் சிக்கனமாகச் செலவழிக்குமாறும் அமைச்சர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"கச்சா எண்ணெய் இநக்குமதியில் அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையைப் பகிர்ந்து கொள்ளுமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட நாம், அரசுப் பணத்தை சிக்கனமாகச் செலவிட வேண்டும்.
விமானப் பயணத்தில் செலவைக் குறைக்க வழி உள்ளது. குறிப்பாக அயல்நாட்டுப் பயணம் மேற்கொள்ளும் அமைச்சர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். அமைச்சகத்தில் பணியாற்றும் அதிகாரிகளும் செலவில் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும்" என்று பிரதமர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
5 நட்சத்திர விடுதிகளில் அரசுக் கூட்டம் கிடையாது!
பிரதமரின் வேண்டுகோளை அடுத்து, 5 நட்சத்திர விடுதிகளில் கூட்டம் நடத்துவதைத் தவிர்க்குமாறும் திட்டமிடப்படாத செலவினங்களை 10 விழுக்காடு வரை குறைக்குமாறும் மத்திய அமைச்சர்களுக்கு நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளூர் வெளியூர் பயணச் செலவுகள், அரசு விளம்பரங்கள், அலுவலகச் செலவுகள், சேவைச் செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களைக் குறைப்பதன் மூலம் இந்த நிதியாண்டில் மத்திய அரசிற்குக் கூடுதலாக ரூ.6,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று நிதியமைச்சக செயலர் சுஷ்மா நாத் தெரிவித்தார்.