டீசல் விலையேற்றத்தால் இரயில்வே நிர்வாகத்திற்கு கூடுதல் செலவு ஏற்பட்டாலும், பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது என்று இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றம் தொடர்பாக அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளதால் ஆண்டிற்கு ரூ.681 கோடி கூடுதலாக செலவாகும் என்றும், இந்த நிதியாண்டின் 10 மாதங்களில் மட்டும் ரூ.560 கோடி கூடுதல் செலவாகும் என்றாலும், அதனை ஈடுகட்ட சரக்கு கட்டணமோ அல்லது பயணக் கட்டணமோ உயர்த்தப்பட மாட்டாது என்று கூறியுள்ளார்.
இந்திய இரயில்வே ஆண்டொன்றுக்கு 227 கோடி லிட்டர் டீசல் பயன்படுத்துகிறது. இதற்காக அது செலவிடும் நிதி ரூ.8,000 கோடிக்கு மேல். இரயில்வேயின் ஒட்டுமொத்த நிர்வாகச் செலவில் இது 15 விழுக்காடாகும்.
சரக்கு கையாளல் அளவை அதிகரிப்பதன் வாயிலாகவும், இரயில் பாதை மின்மயமாக்கலினாலும் (இந்த நிதியாண்டில் ரூ.150 கோடி எரிபொருள் செலவு குறையும்) இந்த கூடுதல் செலவு சமாளிக்கப்படும் என்று லாலு பிரசாத் கூறினார்.
சரக்கு இறக்கிய பிறகு வெற்று வேகன்களாக திரும்பும் பாதைகளில் சிமெண்ட், உணவுப் பொருட்கள், உரம் போன்ற அத்யாவசியப் பொருட்களை 50 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி அளித்து பதிவு செய்து கொண்டு செல்லுமாறு மண்டல இரயில்வே நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.