சிக்கிம் மாநில எல்லை விவகாரம் ஏற்கெனவே தீர்க்கப்பட்டுவிட்ட நிலையில், அம்மாநிலத்தின் ஒரு பகுதி தங்களுக்குச் சொந்தமானது என்ற சீனாவின் கோரிக்கையைத் திட்டவட்டமாக மறுப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சீன அயலுறவு அமைச்சர் யாங் ஜெய்ச்சி ஆகியோருக்கு இடையில் பீஜிங்கில் நாளை நடக்கவுள்ள பேச்சில் சிக்கிம் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இப்பேச்சில், சிக்கிம் மாநிலத்தில் 'விரல் பகுதி' தங்களுக்குச் சொந்தம் என்று சீனா கோரியுள்ளது பற்றி விவாதிக்கப்படுமா என்று டைம்ஸ் நெள தொலைக்காட்சி எழுப்பிய கேள்விக்கு விடையளித்த இந்திய அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன், "சிக்கிம் எல்லைச் சிக்கல் தீர்க்கப்பட்டு விட்டது" என்று குறிப்பிட்டார்.
"சிக்கலுக்குரிய பகுதி உள்ளிட்ட சிக்கிம் எல்லைப் பகுதி முழுவதும் அமைதியை நிலைநாட்டுவது பற்றி விவாதிக்க உள்ளோம். சிக்கிமைப் பொறுத்தவரை இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் எந்தச் சிக்கலும் இல்லை. இதை நாங்கள் சீனாவிடம் மீண்டும் வலியுறுத்துவோம்" என்றார் அவர்.
இருதரப்புப் பேச்சின் போது திபெத் விவகாரத்தை சீனா எழுப்பும் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட சிவசங்கர் மேனன், "திபெத் விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை" என்றார்.
மக்கள் சீனக் குடியரசின் கீழ் உள்ள தன்னாட்சி பெற்ற மண்டலம்தான் திபெத் என்பது இந்தியாவின் நிலைப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.