பெட்ரோலிய பொருட்களின் விலைகளை உயர்த்தியதன் காரணத்தை விளக்கி இன்று இரவு 08.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றுகிறார்.
அப்போது அவர் உலக அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, அதனால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டள்ள நெருக்கடி பற்றி விளக்குவார் என்று தெரிகிறது.
அதேபோல் இந்த விலை உயர்வினால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் பெட்ரோல், டீசல் போன்றவைகளின் மீது விதிக்கும் விற்பனை வரியை குறைக்கும் படி மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுப்பார்.
இதனை மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவும், இந்த துறையின் செயலாளர் எம்.எஸ்.சீனிவாசனும் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்கள்.
சென்ற நிதி ஆண்டில் பெட்ரோலிய பொருட்களின் மீதான விற்பனை வரியின் மூலம் மாநில அரசுகளுக்கு ரூ.55,400 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக தெரிவித்தார். இது இந்த நிதி ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடியாக உயரும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
மாநில அரசுகள் தற்போது பல்வேறு அளவுகளில் விற்பனை வரி விதிக்கின்றன. நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான விற்பனை வரி விதிக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொள்ளும் என்று தெரிகிறது.
மாநில அரசுகள் விற்பனை வரியாக பெட்ரோலுக்கு 20 விழுக்காடும், டீசலுக்கு 15 விழுக்காடும் விதிக்கும்படி கூறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அம்சம் பிரதமரின் உரையில் முக்கிய இடம் பிடிக்கும் என்று தெரிகிறது.