பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை மத்திய அரசு உயர்த்தியுள்ளது தற்கொலைக்குச் சமமானது என்று கூறியுள்ள இடதுசாரிகள், விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் நாளை முதல் ஒரு வாரத்திற்கு நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக எச்சரித்துள்ளனர்.
தனக்குள்ள சுமையைச் சதாராண மக்களின் மீது சுமத்துவதுடன் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற தனியார் எண்ணெய் நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக இடதுசாரிகள் குற்றம்சாற்றியுள்ளனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிசக் கட்சி, ஃபார்வார்ட் பிளாக் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், கச்சா எண்ணெய் மீது விதிக்கப்படும் வரிச்சுமையை மேலும் குறைப்பதுடன் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது கூடுதல் வரிகளை விதிக்க மறுத்ததுடன், விலை உயர்வைத் தவிர்ப்பதற்கு தாங்கள் கூறிய ஆலோசனைகளையும் மத்திய அரசு நிராகரித்து விட்டதாக இடதுசாரிகள் கூறியுள்ளனர்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ஏற்கெனவே மத்திய அரசு தோல்வியடைந்து உள்ள நிலையில், இந்த விலை உயர்வு பணவீக்கத்தை இன்னும் அதிகப்படுத்தும் என்று கூறிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஏ.பி.பரதன், ஷமீம் ஃபைசி ஆகியோர், விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் மறியல், ஆர்ப்பாட்டம், தர்ணா உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்விற்கு மிகப்பெரிய விலையை மத்திய அரசு கொடுக்க வேண்டிவரும் என்று எச்சரித்துள்ள அவர்கள், இதைத் தவிர்க்க உடனடியாக விலை உயர்வு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.