கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவரும் இழப்பை ஈடுகட்ட பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3ம் உயர்த்தப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படவில்லை. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும்.
இத்தகவலை சற்றுமுன் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது மட்டுமின்றி, எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடுகட்ட கச்சா இறக்குமதி மீது தற்பொழுது விதிக்கப்பட்டுவரும் 5 விழுக்காடு தீர்வையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.1 குறைக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி மீதான தீர்வை 10 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைக்கப்படுவதாகவும், பெட்ரோல், டீசல் மீதான இறக்குமதித் தீர்வை 7.5 விழுக்காட்டிலிருந்து 2.5 விழுக்காடாக குறைக்கப்பட்டிருப்பதாகவும், விமான எரிபொருள் (Aviation Turbine Fuel _ATF) மீதான இறக்குமதித் தீர்வையும் 10 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைக்கப்படும் என்று அமைச்சர் முரளி தியோரா கூறினார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையேற்றத்தாலும், கச்சா மீதான இறக்குமதித் தீர்வை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு கணிசமாகக் குறையும்என்று முரளி தியோரா கூறினார்.