இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு காலக்கெடு எதுவும் இல்லையென்றும், அதற்கான நடவடிக்கைகளை முடிப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
சென்னைக்கு இன்று வந்த மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம், இடதுசாரிகளின் கடுமையான எதிர்ப்புக்கிடையில் அணுசக்தி உடன்பாட்டை நிறைவேற்ற முடியுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அணுசக்தி உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடுவை குறிப்பிடுவது மிகவும் கடினமான விடயம்" என்றார்.
அணுசக்தி உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு எந்தக் காலக்கெடுவும் இல்லை என்றாலும், மத்திய அரசின் பதவிக்காலம் முடிவதற்குள் அதை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.
அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக விவாதிக்க அமைக்கப்பட்டுள்ள ஐ.மு.கூ.- இடதுசாரி உயர்மட்டக் குழு விரைவில் கூடும் என்ற அவ்ர், அணுசக்தி உடன்பாட்டை செயல்படுத்துவதற்கான 4 கட்டங்களில் முதல்கட்டம் முடிந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், இரண்டாவது கட்டமான, இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு உடன்பாடு குறித்து சர்வதேச அணுசக்தி முகமையுடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் முடிந்துள்ள நிலையில், அதுபற்றி உயர்மட்டக் குழுவில் விவாதித்து ஒப்புதல் பெற்ற பிறகு உடன்பாடு கையெழுத்தாகும்.
அதற்கடுத்து மூன்றாவதாக, தனித்த கண்காணிப்பு உடன்பாட்டின் அடிப்படையில் அணு எரிபொருள் வழங்கு நாடுகள் குழுவுடன் பேச்சு நடத்திய பிறகு இறுதியாக 123 உடன்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என்றார் பிரணாப் முகர்ஜி.