இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டினை பா.ஜ.க. எதிர்க்கவில்லை என்றும், எதிர்காலத்தில் இந்தியா மேற்கொள்ளும் அணு ஆயுதச் சோதனைகளுக்கு தடை இல்லாத வகையில் அது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறது என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.
இதுகுறித்து தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அசோசெம் நிகழ்ச்சியில் பேசிய அவர், "நாங்கள் அடிப்படையாக அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை எதிர்க்கவில்லை. அமெரிக்காவிடம் இருந்து அணு எரிபொருள் பெறப்படுவதை பா.ஜ.க. எதிர்க்கவில்லை. அமெரிக்காவின் ஹைட் சட்டத்தில் இருந்து இந்தியா தனிமைப்படுத்தப்படும் வகையில் 123 உடன்பாடு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறோம்" என்றார்.
அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, இடதுசாரிக் கட்சிகளுடன் மட்டும் ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பதற்கு அரசு முடிவு செய்துவிட்டது என்றும் அவர் குற்றம்சாற்றினார்.