பெட்ரோல், டீசல் விலையை எவ்வளவு உயர்த்துவது என்று மத்திய அமைச்சரவையில் இன்று இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்க பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
பெட்ரோலிய பொருட்களின் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரி, உற்பத்தி வரியை குறைப்பது குறித்தும் ஆலோசிக்கபட்டு வருகிறது. இதில் மத்திய நிதி அமைச்சகத்திற்கும், பெட்ரோலிய அமைச்சகத்திற்கும் இடையே எழுந்துள்ள கருத்து வேறுபாட்டால், இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, செய்தியாளர்ளிடம் பேசுகையில், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு குறித்து ஆலோசித்து வருகிறோம். இது பற்றி விவாதிக்க இன்று மத்திய அமைச்சரவை கூடுகிறது என்று நேற்று தெரிவித்தார். அவர் மத்திய அமைச்சரவையில் விவாதிக்க உள்ள விஷயங்கள் குறித்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இதன் விலை உயர்வு பற்றி ஆலோசிக்கும் அமைச்சரவை குழுவின் தலைவராக பிரணாப் முகர்ஜி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சரவை கூடுவதற்கு முன்பு, இன்று காலை மத்திய அமைச்சரவையின் அரசியல் விவகார குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் விலை உயர்வு பற்றி ஒருமித்த கருத்து ஏற்பட்டால், அதற்கு பிறகு மத்திய அமைச்சரவையின் பொருளாதார குழுவின் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.
நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, “பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாதது” பிரதமர் மன்மோகன் சிங் என்று கூறினார்.
பிரதமர் மன்மோகன் சிங், கடந்த ஒரு வாரமாக பலமுறை மூத்த அமைச்சரவை சகாக்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். அதேபோல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியுடனும் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால் இதில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.
பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.10, டீசல் லிட்டருக்கு ரூ.5, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.50 என விலையை உயர்த்த் வேண்டும் என்று கூறி வருகிறார்.
ஆனால் பெட்ரோல் விலை ரூ.3 அல்லது ரூ.5 அல்லது ரூ.7 என உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது..
இதேபோல் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 அல்லது ரூ.3 அல்லது ரூ.4 உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.20 உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.