மக்களுக்கு எதிரான அரசிற்கு ஆதரவளிக்க விரும்பவில்லை என்று கூறிய புரட்சிகர சோசலிசக் கட்சி (RSP) ஐ.மு.கூ.- இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்து இன்று திங்கட்கிழமை விலகியது.
வெளியில் இருந்து மத்திய அரசிற்கு ஆதரவளித்து வரும் கட்சிகளில் ஐ.மு.கூ.- இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்து விலகியுள்ள முதலாவது கட்சி இதுவாகும்.
"மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் எதிர்ப்பிருந்தும் அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. எனவே நாங்கள் ஐ.மு.கூ.- இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்து விலக முடிவெடுத்தோம்" என்று புரட்சிகர சோசலிசக் கட்சியின் மூத்த தலைவர் அபானி ராய் தெரிவித்தார்.
அக்கட்சியின் பொதுச் செயலர் டி.சந்திரசூதன், "மக்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளில் இருந்து நாங்கள் விலகியுள்ளோம். இதனால், இந்த அரசிற்கு ஆதரவளிப்பது அவசியமில்லை என்ற முடிவிற்கு நாங்கள் வந்துள்ளோம்" என்றார்.
நான்கு கட்சிகளைக் கொண்ட இடது முன்னணியில் சிறிய கட்சி புரட்சிகர சோசலிசக் கட்சியாகும். மக்களவையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்டுள்ள இக்கட்சி மேற்குவங்கம் மற்றும் கேரளத்தில் ஆளும் இடதுசாரி அரசுகளிலும் அங்கம் வகிக்கிறது.
இதற்கிடையில், இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு பற்றி விவாதிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐ.மு.கூ. - இடதுசாரி உயர்மட்டக் குழு உறுப்பினராக இக்கட்சி தொடர்ந்து நீடிக்கும்.
ஐ.மு.கூ.- இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவிற்கு அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை வகிக்கிறார்.