உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதை தவிர, அரசுக்கு வேறு வழியில்லை என்றும், பொருளாதார கொள்கைகளில் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில், அரசியல் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
புது டெல்லியில் அசோசெம் என்று அழைக்கப்படும், இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் மத்திய அமைப்பின் வருடாந்திர மாநாட்டில் மன்மோகன் சிங் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், பெட்ரோலிய பொருட்களுக்கு வழங்கப்படும் மானியம் மேலும் அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது. உலக அளவில் பல்வேறு பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை முழுமையாக தடுத்துவிடவும் முடியாது.
வறுமையில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறிப்பிட்ட அளவு வரை அரசு பாதுகாக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளை அரசு ஏற்கனவே எடுத்து வருகிறது. கடந்த நான்கு வருடங்களாக மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படவில்லை. அதே போல் சமையல் எரிவாயு, டீசலில் விலைகளை மிக குறைந்த அளவே அதிகரித்துள்ளோம். மற்ற நாடுகளில் உள்ள அளவிற்கு கூட, இங்கு பெட்ரோல் விலை இல்லை.
இதே மாதிரி மற்ற தேசிய வளங்களிலும், குறிப்பாக நீர் ஆதாரத்தில் நம்மிடையே கருத்து ஒற்றுமை இல்லை. இந்த நிலைமை நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது. நம்மிடையே காலத்திற்கு ஏற்ற மாதிரியான பொருளாதார கொள்கைகளை கடைப்பிடிப்பதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே பரந்த அளவில் கருத்து ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்று மன்மோகன் சிங் கூறினார்.
உலக அளவில் அதிகரித்து வரும் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் இழப்பை ஈடுகட்ட, ஏற்கனவே பெட்ரோலிய அமைச்சகம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10, டீசல் விலை ரூ.5, சமையல் எரிவாயு சிலிண்டரி விலை ரூ.50 உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
ஆனால் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பல்வேறு பொருட்களின் விலை உயர்வால் மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கடுமையாக எதிர்ப்பதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா, அரசு பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களின் பொருளாதார நிலையை பற்றி கவலை கொள்வதாகவும், இதற்கு தீர்வு காண எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி விவாதித்து வருவதாகவும் தெரிவித்தார்.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வை ஈடுகட்ட, ஸ்ரீலங்கா, தைவான், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி விட்டன.