பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியா- பாகிஸ்தான் கூட்டு நடவடிக்கைக் குழு இம்மாத இறுதியில் டெல்லியில் கூடித் தனது அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2006 நவம்பரில் மும்பை புறநகர் ரயில்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு அமைக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியா- பாகிஸ்தான் கூட்டு நடவடிக்கைக் குழு இம்மாதத்தின் பிற்பகுதியில் கூடுகிறது.
இதற்கான சரியான தேதியை முடிவு செய்வது குறித்து இரு தரப்பும் ஆலோசித்து வருகின்றன. இக்கூட்டம் கூட்டு நடவடிக்கைக் குழுவின் மூன்றாவது கூட்டம் ஆகும்.
ஹைதராபாத், அஜ்மீர் குண்டுவெடிப்புகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரங்களை இக்கூட்டத்தில் இந்தியா சமர்ப்பிக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் இணைந்து போரிடத் தயார் என்று பாகிஸ்தானில் அமைந்துள்ள புதிய அரசு அறிவித்துள்ள நிலையில் நடக்கவுள்ள இக்கூட்டத்தில், பாகிஸ்தான் தரப்பில் இருந்து அதிகமான ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கலாம் என்றும் அவ்வட்டாரங்கள் கூறின.
கடந்த மாதம் இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் இஸ்லாமாபாத்தில் நடந்த சந்திப்பின்போது, பயங்கரவாதம் இருதரப்பிற்கும் பொதுவான அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் அதற்கெதிராகப் போராட வேண்டும் என்று பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறியிருந்தார்.