ஆந்திர மாநிலத்தில் 4 மக்களவைத் தொகுதிகளுக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடந்த இடைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின.
கரீம் நகர் மக்களவைத் தொகுதியில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் 15,289 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜீவன் ரெட்டியைத் தோற்கடித்தார்.
கடந்த 2006 தேர்தலில் சந்திரசேகர ராவ் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்தத் தேர்தலில் வாக்கு வித்தியாசம் குறைந்துள்ளது அவருடைய செல்வாக்கு சரிந்துள்ளதையே காட்டுகிறது.
மொத்தம் 4 மக்களைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், தெலுங்குதேசம் கட்சி மற்றொரு இடத்திலும் வெற்றிபெற்றது.
18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக் கட்சி 7 இடங்களை மட்டுமே பிடித்தது. காங்கிரஸ் 6 இடங்களிலும், தெலுங்குதேசம் கட்சி 5 இடங்களிலும் வெற்றிபெற்றது.
ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக் கட்சியைச் சேர்ந்த 4 மக்களவை உறுப்பினர்களும், 16 சட்டமன்ற உறுப்பினர்களும் மொத்தமாகப் பதவிவிலகினர்.
இவற்றுக்கும் ஏற்கெனவே உறுப்பினர்கள் இறந்ததால் காலியாக இருந்த 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து கடந்த மாதம் 29 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
ஆந்திரச் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் கட்சிகள் தங்கள் பலத்தை நிரூபிப்பதற்கான தேர்தலாகவும் இது கருதப்பட்டது.