Publish Date: Sun, 01 Jun 2008 (12:27 IST)
Updated Date: Sun, 01 Jun 2008 (12:26 IST)
நமது நாடு முழுவதும் 345 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பி.கே.மிஸ்ரா தெரிவித்தார்.
இது குறித்து கெளகாத்தியில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் அவர் பேசுகையில், "எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட வீரர்களை நாங்கள் புறக்கணிக்க விரும்பவில்லை. அவர்களையும் சக மனிதர்களைப் போலவே பாவிக்க விரும்புகிறோம். இதனால் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து தொடர்ந்து பணியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
"எய்ட்ஸ் நோயை போலவே மலேரியாவினாலும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் கடந்த ஆண்டு 9,235 பேர் மலேரியாவினால் பாதிக்கப்பட்டனர்.
வடகிழக்கு மாநிலங்களில் திரிபுராவில்தான் வீரர்கள் அதிகமாக மலேரியாவினால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு இங்கு 6,840 வீரர்களும், அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவில் 1,140 வீரர்களும், மிசோரமில் இருவரும் மலேரியாவினால் பாதிக்கப்பட்டனர்" என்றும் மிஸ்ரா தெரிவித்தார்.