தங்களுக்குப் பழங்குடியினர் அந்தஸ்து கோரிப் போராடி வரும் குஜ்ஜார் இனத்தவருக்கு 4 முதல் 6 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு வழங்கலாம் என்று மத்திய அரசிற்கு ராஜஸ்தான் மாநில அமைச்சரவை பரிந்துரை அனுப்பியுள்ளது.
குஜ்ஜார்கள் உள்ளிட்ட இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பழங்குடியினர் அல்லாத பிரிவின் கீழ் 4 முதல் 6 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற மாநில அமைச்சரவையின் பரிந்துரையை முதல்வர் வசுந்தரா ராஜே நேற்றிரவு மத்திய அரசிற்கு அனுப்பியுள்ளார் என்று அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த வாரத் துவக்கத்தில் முதல்வர் வசுந்தரா ராஜே பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு இன்னும் பதில் வரவில்லை என்றும், குஜ்ஜார்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் தாமதத்தைத் தவிர்க்கவே தற்போது மீண்டும் அமைச்சரவையின் மூலம் பரிந்துரை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இதற்கிடையில் ராஜஸ்தான் மாநிலக் காவல்துறை இயக்குநர் ஏ.எஸ்.கில் ஜூலை 31 வரை நீண்ட விடுமுறையில் அனுப்பப்பட்டு விட்டார். பா.ஜ.க., குஜ்ஜார் இனத் தலைவர்கள் ஆகிய இருதரப்பு உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் கில் மீது எழுந்த அதிருப்தி காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கில் பதவியில் கூடுதல் காவல்துறை இயக்குநர் கே.எஸ்.பைன்ஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.