ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசுவேன் என்று எடியூரப்பா கூறினார்.
கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்பு தும்கூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த எடியூரப்பா, "ஒகேனக்கல் குடிநீர்த் திட்டச் சிக்கலில் கர்நாடகத்தின் நலன் பாதுகாக்கப்படும். அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பிறகு இதுகுறித்து அரசு தலைமை வழக்கறிஞரிடம் கருத்துக் கேட்கப்படும்.
அதையடுத்து ஒரு குழுவினருடன் நான் தமிழகத்திற்குச் சென்று சென்னையில் முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்து ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் குறித்துப் பேச்சு நடத்துவேன். பேச்சு தோல்வியடைந்தால் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகும்" என்றார்.
ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மார்ச் 16 ஆம் தேதி ஒகேனக்கல் பகுதிக்கு எடியூரப்பா வந்தார் என்பதும், அதைத் தொடர்ந்துதான் கன்னடர்களின் போராட்டம் தீவிரமடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.