கர்நாடகாவின் 25 ஆவது முதலமைச்சராக பா.ஜ.க.வைச் சேர்ந்த பி.எஸ்.எடியூரப்பா பதவியேற்றார். அவருடன் 29 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதில் 4 பேர் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகச் சட்டப் பேரவையான விதன் செளதாவில் இன்று மதியம் 1.50 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், எடியூரப்பாவிற்கு மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாகூர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இவ்விழாவில் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர்கள் ராஜ்நாத் சிங், எல்.கே.அத்வானி, அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
கர்நாடகச் சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 224 இடங்களுக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 110 இடங்களில் வெற்றிபெற்றது. ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில், பற்றாக்குறையான 3 இடங்களுக்கு சுயேட்சைகளின் ஆதரவைப் பா.ஜ.க. நாடியது.
இந்நிலையில் பா.ஜ.க., காங்கிரஸ், ம.ஜ.த. கட்சிகளில் இருந்து அதிருப்தியின் காரணமாக சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற 6 உறுப்பினர்களும் பா.ஜ.க.விற்கு ஆதரவளித்தனர்.
கர்நாடக முதலமைச்சராக இரண்டாவது முறையாக எடியூரப்பா பதவியேற்றுள்ளார். கடந்த முறை ம.ஜ.த. தனது ஆதரவை விலக்கிக் கொண்ட காரணத்தால், பதவியேற்ற ஏழாவது நாளில் பா.ஜ.க. ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.