ஹரியானா மாநிலத்தில் குஜ்ஜார்கள் நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்திப் போராட்டம் நடத்திவரும் குஜ்ஜார்கள் இன்று ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் உள்ள சமலகா என்ற பகுதியில் குவிந்து மறியலில் இறங்கினர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலை எண் 1-இல் பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலைக் கைவிடுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு குஜ்ஜார்கள் இணங்காததால், காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர்.
இதையடுத்து போராட்டக்காரர்கள் காவலர்களைத் தாக்கத் துவங்கினர். இதில் 14 காவலர்கள் காயமடைந்தனர். 3 காவலர்களுக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இந்நிலையில், வேறு வழியின்றி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இதனால் உண்டான நெரிசலில் சிக்கி முதியவர் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்ததாகவும் ஹரியானா காவல்துறை துணைத் தலைவர் வி.பி.சிங் தெரிவித்தார்.
இதற்கிடையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.