66 பேர் கொல்லப்பட்ட ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பாக மதரசா ஆசிரியர், பொதுத் தொலைபேசி நிலைய உரிமையாளர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மே 13 அன்று நடந்த ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பாக விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு, ஹக்கிமுதீன் என்ற மதரசா பள்ளி ஆசிரியரையும், கமீல் என்ற பொதுத் தொலைபேசி நிலைய உரிமையாளரையும் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
மதுரா மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் விசாரணைக்காக ஜெய்ப்பூர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
நக்லா இமாம் கான் கிராமத்தைச் சேர்ந்த ஹக்கிமுதீன், அங்கு கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இதே ஊரைச் சேர்ந்த 15 வயது சிறுவனான கமீல் பொதுத் தொலைபேசி நிலையம் நடத்தி வருகிறார்.
ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள ஜமா மசூதி இமாம் முகமது இயாஸ் கொடுத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.