கடந்த 2006 இல் காஷ்மீரில் ஏராளமான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வில் முக்கியக் குற்றவாளியான லஷ்கர்- இ தாய்பா தீவிரவாதியும் அவரின் மனைவியும் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் உள்ள கந்தபுரா பகுதியில் பதுங்கியிருந்த லஷ்கர்-இ தாய்பா தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் இன்று மோதல் வெடித்தது.
இதில் லஷ்கர்- இ தாய்பா இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவனான அகமது அட்டோ என்ற அபு யாஷிர் மற்றும் அவரின் மனைவி சப்ரினா பானு ஆகியோர் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படைத் தரப்புப் பேச்சாளர் கோஸ்வாமி தெரிவித்தார்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து 2 ஏ.கே.47 துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஜம்முவில் குல்கண்ட் மலைப் பகுதியில் 24 க்கும் மேற்பட்ட இந்துக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் அகமது அட்டோ முக்கியக் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.