கர்நாடகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்து புதிய அரசு அமையவுள்ளதால், தற்போது அமலில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டது.
கர்நாடகச் சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 224 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. 110 இடங்களில் வெற்றிபெற்றது. ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை என்பதால், இன்னும் மூன்று எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற பா.ஜ.க. முயற்சித்து வந்தது.
இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்றுள்ள 6 சுயேட்சைகளில் 5 பேர் பா.ஜ.க.விற்கு ஆதரவளித்தனர். இதையடுத்து ஆட்சிமைக்குமாறு பா.ஜ.க. ஆளுநர் ராமேஷ்வர் தாகூர் அழைப்பு விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட பா.ஜ.க. நாளை பிற்பகல் அரசமைப்பதாக உறுதியளித்தது. அதன்படி நாளை நடக்கும் விழாவில் பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றுக் கொள்கிறார்.
இதற்கிடையில், தன்னுடன் பதவியேற்பதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் பட்டியலுடன் இன்று டெல்லி செல்லும் எடியூரப்பா, அதுபற்றி அத்வானி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க. தேசியத் தலைவர்களுடன் கலந்தாலோசித்து ஒப்புதல் பெறவுள்ளார்.