ராணுவத்தினர் பயன்படுத்தும் சீருடைகள், வாகனங்கள், கருவிகள் உள்ளிட்டவற்றையும், அவை போன்று தயாரிக்கப்பட்ட பொருட்களையும் பொதுவான இடங்களில் விற்பனை செய்ய ஜம்மு- காஷ்மீர் அரசு தடை விதித்துள்ளது.
குறிப்பாக பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகமுள்ள பாரமுல்லா மாவட்டத்தில் இத்தடை கடுமையாக அமல்படுத்தப்படும் என்று பாதுகாப்புப் படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
ராணுவ வாகனங்களில் பூசப்படுவது போன்ற வண்ணங்களையும் பொது மக்கள் பயன்படுத்தக் கூடாது என்று அரசின் வேண்டுகோளின்படி மாவட்ட நீதிபதி விதித்துள்ள தடை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அண்மையில் ராணுவச் சோதனைச் சாவடிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குக் காரணமான பயங்கரவாதிகள் ராணுவத்தினரின் உடைகளைப் பயன்படுத்தியதே இந்நடவடிக்கைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.